திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 நாட்களில் ரூ.1.59 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை : வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 1 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 750 ரூபாய்க்கு காய்கறி மற்றும் பழங் கள் விற்பனை செய்யப்பட்டு உள்ள தாக வேளாண் இணை இயக்குநர் கி.ராஜசேகர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக பொது மக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழ வகைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழ வகைகள் விநியோகம் செய்ய மொத்தம் 452 நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.59 கோடிக்கு காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 452 நடமாடும் வாகனங்கள் மூலம் 1,058.05 மெட்ரிக் டன் எடையுள்ள காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 750 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஊடரங்கு அடுத்த 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதே போல நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிகளில் மட்டும் அதிக அளவிலான நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. திருப்பத்தூர் நகராட்சி யில் மட்டும் 310 நடமாடும் வாகனங் களில் விற்பனை நடைபெறுகிறது.

காய்கறி மற்றும் பழ வகைகளை அதிக விலைக்கு விற்றாலோ, தரமில்லாத காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்தாலோ அல்லது தங்கள் பகுதிக்கு காய்கறிகள் சரியாக கிடைக்காவிட்டால் பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 04179-220020 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தோட்டக்கலைத்துறையினர் கொண்ட தனி குழு அமைக்கப் பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கான அனுமதியும் உடனடியாக ரத்து செய்யப்படும்.

மேலும், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துச்செல்லும் வியாபாரிகளுக்கு ஒவ்வொரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தான் அவர்கள் 3 அல்லது 5 மணி நேரத்துக்கு விற்பனை செய்ய வேண்டும். அப்பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு காய்கறிகள் விற்பனை யாகாவிட்டால் வேளாண் அலுவ லகத்தில் தெரிவித்துவிட்டு, அடுத்த இடத்துக்கு சென்று பொருட்களை விற்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

கடந்த வாரத்தை காட்டிலும் நடப்பு வாரத்தில் விற்பனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (இன்று) முதல் மாவட்டம் முழுவதும் கூடுதல் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய விரும்புவோர் அதற்கான சான்று களுடன் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அங்கு அவர் களுக்கான அனுமதி சீட்டு முறை யாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை நடமாடும் வாகனங்கள் மூலமாக பெற்றுக்கொண்டு முழு ஊரடங்கை முறையாக கடைப்பிடித்து கரோனா பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்