நளினி-முருகன் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்க தற்போதைய நிலையில் முடியாது என காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இருவரின் பரோல் மனுவும் நிராகரிக்கப் படலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியும், ஆண்கள் சிறையில் உள்ள இவரது கணவரான முருகன் என்ற கரன் ஆகியோர் 30 நாள் பரோல் கோரியுள்ளனர். சிறை நிர்வாகத்திடம் இவர்கள் அளித்துள்ள மனுவின் மீது சிறை நன்னடத்தை அலுவலர் குழுவினர் மற்றும் காவல் துறை சார்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் இறுதி முடிவு எடுப்பார்கள் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், காவல் துறை சார்பில் நளினி மற்றும் முருகன் ஆகியோர் 30 நாட்கள் தங்க உள்ள காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முகவரி ஒன்றை கொடுத்திருந்தனர். அந்த வீட்டின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காட்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில், தற்போதைய நிலையில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கரோனா ஊரடங்கு பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் பரோலில் இருவரும் வருவதால் கூடுதலாக காவலர்களை பணியில் நியமிக்க வேண்டும்.
இது கரோனா தடுப்புப் பணியில் தொய்வு ஏற்படும் என்பதால் தற்போதைய சூழலில் பாதுகாப்பு அளிக்க முடியாது என காட்பாடி காவல் நிலையம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சிறைத் துறை நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அளிப்பதில் காவல் துறையினர் கைவிரித்துள்ளதால் இருவரும் கோரியுள்ள பரோல் மனு நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago