தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கிய - 52 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசு மருத்துவமனைகளில் ஒப்படைப்பு : தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடவடிக்கை

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கிய 52 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசு மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப ஆட்சியர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்தார்.

சீனிவாசன் சேவை அறக் கட்டளை சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 ஆக்சிஜன் செறிவூட்டிகள், டைட்டன் நிறுவனம் சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 பிளோ மீட்டர்கள், பூமிகா அறக்கட்டளை சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள், திருவான்மியூர் ரோட்டரி கிளப் மற்றும் ரிச்மண்ட் தமிழ் சங்கம் சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் செறிவூட்டி, என்-95 முகக் கவசங்கள் ஆயிரம் மற்றும் பிரீத் இந்தியா சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் கருதி தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கிய மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளின் தேவைக் கேற்ப அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது, ஊரக நலப் பணிகள்இணை இயக்குநர் கண்ணகி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் அஜிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா, கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE