அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் த.ரத்னா முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து பேசியது:
மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்கவும், குறைந்த அளவு பாதிப்புடைய தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.2,820 மதிப்பில் காதொலி கருவிகளும், வருவாய்த்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.96,000 மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.52 லட்சம் மதிப்பில் வீடுகட்ட ஆணைகளும், சமூக நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.8,880 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும் என 15 பேருக்கு ரூ.3.65லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், எஸ்.பி வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago