திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 133.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,626.18 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 859.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் 89.75 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து நேற்று காலையில் 90.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 529.75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 28 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடியாகவும் இருந்தது.
குண்டாறு அணை
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நிரம்பியது. இந்த அணையின் உயரம் 36.10 அடி. சிறிய அணை என்பதால் கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கிய சில நாட்களிலேயே இந்த அணை நிரம்பிவிடும். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே நிரம்பிவிட்டது. அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.அனைத்து அணைகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குண்டாறு அணைப் பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தடையை மீறிச் சென்று குளிப்பது வாடிக்கையாக உள்ளது. மேலும், அணையில் இருந்து தண்ணீர் மறுகால் செல்லும் பகுதி வழியாக நடந்து சென்று அதனை வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் இளைஞர்கள் பகிர்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
போலீஸார் எச்சரிக்கை
கடந்த ஆண்டு தடையை மீறி அணையில் குளித்த 2 பேர் உயிரிழந்து விட்டனர். தற்போது அணை நிரம்பியுள்ளதால், அணைக்குச் செல்லும் வழியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப் பட்டுள்ளது. அணையில் யாரும் குளிக்கக் கூடாது, எச்சரிக்கையை மீறி அணைக்குச் சென்று குளிப்பது, தண்ணீர் வெளியேறும் பகுதி வழியாக நடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago