ரூ. 27 கோடியில் நந்தன் கால்வாய் புனரமைப்பு : அமைச்சர் மஸ்தான் ஆய்வு

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே நந்தன் கால்வாய் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சல் ஆற்றில் வரும் தண்ணீரை திருப்பி திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 6,598. ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் நந்தன் கால்வாய்அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 27 கோடியில் நந்தன்கால்வாய் புனரமைக்கும் பணி விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளகொளத்தூர் பகுதியில் இருந்து பனமலைபேட்டை வரை நடைபெற்று வருகிறது. தற்போது நல்லாண்பிள்ளைபெற்றாள் அருகே நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சரிடம் பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கூறியது:

நந்தன்கால்வாய் குறுக்கே 6 சிறுபாலங்கள் மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றாள் சாலபுத்தூர் ஏரி இடையே ஒரு பெரிய பாலம், மற்றும் 2 மதகுகள் ஆகிய பணிகளும், நந்தன்கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் சோ.குப்பம்,தேவதானம்பேட்டை, நல்லாண்பிள்ளை பெற்றாள், பாக்கம், மாதப்பூண்டி ஆகிய ஏரிகளின் மதகுகளும் புனரமைக்க உள்ளன. நந்தன்கால்வாயில் 12 கி.மீ தூரத்திற்கு சிமென்ட் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் விளை பொருட்களை எடுத்து செல்ல வசதியாக நந்தன்கால்வாய் கரை தார் சாலையாக மாற்றப்பட உள்ளது. மேலும் பனமலை பேட்டை வரை கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் மஸ்தான், மரக்காணம் அருகே அனிச்சங்குப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், முகாம் பகுதியில் நாள்தோறும் கிருமிநாசிகள் தெளித்து தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். குறைகளை கேட்க தனியாக வருவாய் ஆய்வாளர் நியமிக்க வேண்டும். வீடுகள் இடவசதி இல்லாமல் நெருக்கமாக உள்ளது. பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று முறையிட்டனர்.

இதனைக் கேட்ட அமைச்சர், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மரக்காணம் வட்டாட்சியர் உஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்