கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து பணியாற்ற அதிமுக தயார் : முன்னாள் அமைச்சர் தங்கமணி கருத்து

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை களில், அரசுடன் இணைந்து செயல்பட அதிமுக தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, பரமத்தி வேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சேகர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜை நேரில் சந்தித்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமானவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, வாய்ப்புள்ள இடங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் புதிய கரோனா சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும்.

கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை. எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மாவட்ட அதிமுக சார்பில் தற்போது குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். திருச்செங்கோடு நகராட்சிப்பகுதியிலும் வழங்குவதற்கு, ஆணையரிடம் கேட்டபோது சட்டச்சிக்கல் உள்ளது என்று கூறி போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுதொடர்பாக ஆட்சியரிடம் புகார் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால், அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்க தயாராக உள்ளோம். மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் அதிமுக மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்துள்ளோம் விரைவில் அவற்றை ஆட்சியரிடம் வழங்கவுள்ளோம். பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்