பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு :

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3.20 அடி உயர்ந்து 132.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,935 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,262 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

இதுபோல் நேற்று முன்தினம் 88 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1.75 அடி உயர்ந்து நேற்று காலையில் 89.75 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 89.75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 27.25 அடியாக இருந்த கொடு முடியாறு அணை நீர்மட்டம் 28 அடியாக உயர்ந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 42.49 அடியாக இருந்தது. நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாக உள்ளது.

திருநெல்வேலியில் நேற்று பகலில் மழை பெய்யாத நிலையில் சூறை காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற் பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனுக்குடன் செயல்பட்டு மின்விநியோகத்தை சீராக்கினர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 5 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் மழைப்பதிவு இல்லை.

தொடர் மழையால் கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று ஒன்றரை அடி உயர்ந்து 73.50 அடியாக இருந்தது.

ராமநதி அணை நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 62.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒன்றேகால் அடி உயர்ந்து 57.75 அடியாக இருந்தது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 81.50 அடியாக இருந்தது. குண்டாறு அணை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்