கரோனா பரவலைத் தடுக்க : போர்க்கால நடவடிக்கை தேவை : அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள்அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி மற்றும்பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்எஸ்.நாகராஜனை சந்தித்து, கரோனா பரவல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தி மனு அளித்தனர்.

பின்னர், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்கள் எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். அதிகமான வாகனங்களைவைத்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும்.கூடுதலாக கரோனா பரிசோதனைகள் நடத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளோம். கருப்பு பூஞ்சைநோய்த்தொற்று மருந்து சிங்கப்பூரில் இருந்து கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவினரை பொதுமக்க ளுக்கு உதவிகள் செய்ய காவல்துறையினர் அனுமதி அளிப்பதில்லை. கரோனா தடுப்புப் பணிக்காக, கோவை மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்களை நியமித்ததற்கும், ஆலோசனை கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுப்பதற் கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறோம். கோவையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தாலும், மு.க.ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE