கரோனா தடுப்பு ஊரடங்கால் ஒரு மாதத்தில் - கறிக்கோழி பண்ணைத் தொழிலில் ரூ.800 கோடி வருவாய் இழப்பு : முட்டைக்கோழி பண்ணையாளர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

ஊரடங்கால் கறிக்கோழிப் பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழி தினசரி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனைக்கு செல்லும்.

தினசரி பல்லடத்தில் உள்ள பிராய்லர் கோ ஆர்டிநேஷன் கமிட்டி (பிசிசி) கறிக்கோழிக்கு விலையை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள். இந்நிலையில், கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கறிக்கோழி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்றுமுன் தினம் கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ல் இருந்த நிலையில், நேற்று ரூ.22 குறைந்து ரூ.62 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கறிக்கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணை யாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. இதனால், கோழிகள் தேக்கம் அடைந்துள்ளன.

மேலும், கோழியின் எடை அதிகரித்துள்ளது. குஞ்சு விடவும் போதிய இடம் இல்லை. கடந்த ஆண்டு கறிக்கோழி உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு ரூ.60 ஆக இருந்தது. ஊரடங்கால் தீவன மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் தற்போது உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கோழிகள் தேக்கம் மற்றும் விலை சரிவு காரணமாக கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஒரு வாரத்துக்கு ஏற்கெனவே ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டநிலையில், தற்போது, ரூ.200 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இம்மாதம் மட்டும் இத்தொழிலில் ரூ.800 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, காய்கறி விற்பனை செய்வதுபோல கறிக்கோழியை ஒரு கிலோ, இரண்டு கிலோ என பேக்கிங் செய்து வாகனங்கள் மூலம் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வீதி வீதியாகச் சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்