வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 200 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன்(வேலூர்), அமலு(குடியாத்தம்), விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா வரவேற்றார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பேசும்போது, “வேலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் அலை வந்தபோது சுமார் 2,700 பேர் சித்த மருத்துவம் மூலம் குணமடைந்தனர். 2-வது அலையில் தற்போது வரை ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.
2-வது அலை தொடக்கத் திலேயே விஐடி பல்கலையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் 352 பேர், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் 1,254 பேர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சித்த மருத்துவத்தை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் தற்போது விஐடி பல்கலையில் மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரியம் மிக்க மருத்துவம், இயற்கை உணவுகளோடு சிறந்த வைத்தியம் பார்க்கப்படும்.
தமிழர்களின் பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கரோனா வராமல் இருக்க இம் மையம் சிறந்ததாக இருக்கும். இது போன்ற தனித்துவமான மருத்துவ சிகிச்சைகளை கரோனா நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago