என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி : புதுச்சேரியின் புதிய அமைச்சரவை பதவியேற்பில் தொடரும் தாமதம்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொடரும் இழுபறியால் புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவை பதவியேற்பில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது.

முதல்வர் களம் இறங்க வேண்டும்

கரோனாவில் இருந்து குணமடைந்த முதல்வர் ரங்கசாமி கடந்த சில நாட்களாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பூரண நலம் பெற்ற முதல்வர் எம்எல்ஏக்களின் பதவியேற்புக்காக இன்று சட்டப்பேரவைக்கு வருகிறார். இச்சூழலில், கரோனா தொற்று தடுப்பு பணிகளில் நேரடியாக முதல்வர் களம் இறங்க வேண்டும். சிகிச்சை அளிப்பதில் உள்ள நிர்வாக சிக்கல்களை களைய வேண்டும்; தமிழகத்தைப் போல் ரேஷன்கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ்-10, பாஜக-6 இடங்களை வென்றது. இக்கூட்டணி 16 இடங்களை பெற்று பெரும்பான்மை பெற்றது. இக்கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். தேர்தல் முடிவு வந்து 24 நாட்கள் ஆகியும் அமைச்சர்கள் இதுவரை பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

பெரிய மாநிலங்களில் அரசு பொறுப்பேற்று அமைச்சர்கள் துறை பணிகளை தொடங்கி விட்ட நிலையில், மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவையை நியமிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவல் அசாதாரண நிலையில் உள்ள கடந்தசில நாட்களாக அரசு அதிகாரிகளே அதற்கான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, "புதுவை சட்டசபையில் முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர். இது வழக்கமானது. முதல்வர் நீங்கலாக உள்ள 5 அமைச்சர்களில் பாஜக தரப்பில் துணை முதல்வர் உட்பட3 அமைச்சர்கள் பதவியும் சபாநாயகர் பதவியும் தர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். ஆனால், ‘2 அமைச்சர்கள், துணை சபநாயகர் பதவி மட்டும் தர முடியும்’ என்று எங்கள் தலைவர் ரங்கசாமி கூறி விட்டார். இதில் முடிவு எட்டப்படவில்லை. அதனால், அமைச்சர்கள் பதவியேற்பதில் தாமதம்" என்கின்றனர்.

பாஜக தரப்பில் விசாரித்த போது, " பாஜகவினர் 6 பேர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். மேலும், எங்கள் கட்சியைத் சேர்ந்த3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்திருக்கிறது. இதனால் பாஜக எம்எல்ஏக்களின் பலம் புதுவைசட்டசபையில் 9 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுயேச்சை எம்எல்ஏக்களில் சிலரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், புதிய அரசில் அமைச்சர்களை சரி சமமாக பங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்கின்றனர்.

"பவுர்ணமி நாளான இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடக்கிறது. அதையடுத்து தேய்பிறை தொடங்குகிறது. ரங்கசாமி ஆன்மிகவாதி. அவரது அடுத்த முடிவு வளர்பிறையில் தான் இருக்கும் என்பதால் அமைச்சரவை பதவியேற்பு தாமதமாகும்" என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பெரிய மாநிலங்களில் அரசு பொறுப்பேற்று அமைச்சர்கள் துறை பணிகளை தொடங்கி விட்ட நிலையில், மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE