58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி, விவ சாயிகள் மற்றும் பார்வர்டு பிளாக் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், உசிலம்பட்டி 58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயராஜ், இணைச் செயலாளர் சிவப்பிரகாசம், சட்ட ஆலோசகர் ஜெயக்குமார் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் உள்ள விவரம்:

முல்லைபெரியாறு அணை பகுதியில் மழை பெய்ததன் மூலம் தற்போது அந்த அணையில் 130 அடி வரையிலும், தொடர் நீர்வரத்தால் வைகை அணையில் 67 அடி வரையிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. மழைக் காலம் தொடங்கும் நிலையில், பரவலாக மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உசிலம்பட்டி பகுதியிலும் கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்.

இதனால் 30 கண்மாய்கள், 5 கசிவுநீர் குட்டைகள் நிரம்பும். இதன் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், 110 கிராமங்களுக்கு குடிநீர் வசதி மேம்படும். இதன்மூலம் இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.

இதனால் உடனே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.வி.கதிரவன் கூறுகையில், ‘தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஆட்சியர் உறுதியளித்தார்.' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE