தொகுப்பூதியம் அடிப்படையில் - மருத்துவர், செவிலியர் பணி நியமனம் நாமக்கல், தி.கோட்டில் நாளை நேர்காணல் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்காணல் நாளை (27-ம் தேதி) நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக கூடுதல் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பாரா மெடிக்கல் பணியாளர்கள் தேவைக்கேற்ப தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான நேர்காணல் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனை, குமாரபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நாளை (27-ம் தேதி) நடைபெற உள்ளது. மருத்துவ அலுவலர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும். தொகுப்பூதியாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.

செவிலியர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிஜிஎன்எம் படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். நுண்கதிர் படப்பிடிப்பாளர் பணியிடத்துக்கு டிஆர்டிடி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆய்வக நுட்புநர் பணிக்கு பிளஸ் 2 மற்றும் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் மற்றும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு அரசு விதிமுறையின்படி தொகுப்பூதியம் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்