மதகு பழுது காரணமாக கீழப்பாவூர் உட்பட பல்வேறு குளங்களுக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைத்து குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கீழப்பாவூர் பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் சிற்றாற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளது.
மேலப்பாவூருக்கு மேற்கு பகுதியில் உள்ள அணைக்கட்டு வழியாக மேலப்பாவூர் குளம், கீழப்பாவூர் பெரிய குளம், அருணாப்பேரி குளம், நாகல் குளம், மேலப்பட்டமுடையார்புரம் குளம், கல்வெட்டான்குளம், மறவன்குளம், கரும்பனூர் பெரிய குளம், ஆலங்குளம் பெரிய குளம் வரை உள்ள குளங்கள் நீர் வரத்தை பெறுகின்றன.
ஆனால், மேலப்பாவூருக்கு மேற்கு பகுதியில் உள்ள மதகு பழுதடைந்து இருப்பதால் தற்போது ஆற்றில் வரும் தண்ணீரானது குளங்களுக்குச் செல்வது தடைபட்டுள்ளது. மதகின் மேல் பகுதியில் திருகாணி இல்லாததால் ஷட்டர் கீழே இறங்கி குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் குளங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் ஆற்றில் செல்கிறது.
இந்த மதகை சீரமைத்தால் தான் மேலப்பாவூர் குளம், கீழப்பாவூர் பெரிய குளம், அருணாபேரி குளம், நாகல் குளம், மேலப்பட்டமுடையார்புரம் குளம், கல்வட்டான் குளம், மறவன் குளம், கரும்பனூர் பெரிய குளம், ஆலங்குளம் பெரிய குளம் வரை தண்ணீர் சென்றடையும். இந்த குளங்களை நம்பியுள்ள பாசன நிலங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் கீழப்பாவூர் குளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் செடி, கொடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. எனவே, தண்ணீர் தடையின்றி செல்வதில் சிக்கல் உள்ளது. எனவே மதகை விரைந்து சீரமைத்து, நீர்வரத்து வாய்க்காலையும் சீரமைத்து குளங்களுக்கு தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago