திருநெல்வேலி மாவட்டத்தில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக் கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
திசையன்விளையில் இப்பணியை தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார். பேரூராட்சி சார்பில், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையையும் தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து, அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றியதால் கடந்த 4 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுபாடு அறவே நீங்கிவிட்டது. திசையன்விளை அருகே குமாரபுரம் அந்தோனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 200 படுக்கைகளுடனும், வள்ளியூர் யுனிவர்செல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடனும் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்தில் இப்பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, சார் ஆட்சியர் பிரதீக் தயாள், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுமதி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சு.தேவராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தென்காசி
ஆய்க்குடி அமர் சேவா சங்க வளாகத்தில் 36 மாற்றுத்திறனாளிகளுக்கும், 122 பொதுமக்களுக்கும் முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், அமர்சேவா சங்கத் தினர்கள், உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.தென்காசி எம்.கே.வி.கே. மேல்நிலைப்பள்ளியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் சமீரன், எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்எல்ஏ பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆட்சியர் கூறும்போது, ‘30 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரே நாளில் 3,000-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இன்னும் 5 தினங்களில் நமக்கு கொடுக்கப்பட்ட 25,000 தடுப்பூசிகளை போட்டிபோட்டு போட வேண்டும். அடுத்தகட்டமாக 25,000 தடுப்பூசி பெற முடியும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யோகானந்த், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago