விசைத்தறி தொழிலாளர்களுக்கு - 10 சதவீத கூலி உயர்வு உடன்பாடு : பேச்சுவார்த்தையில் முடிவு, வேலை நிறுத்தம் வாபஸ்

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஒப்பந்தம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கூலி உயர்த்தப்படாததால் கூலி உயர்வு கோரி கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

கோட்டாட்சியர் முருக செல்வி தலைமை வகித்தார். திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விசைத்தறி உரிமை யாளர்களின் கீழ் பணிபுரியும் நேரடி தொழிலாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் உற்பத்தி யாளர்களிடம் பணிபுரியும் தொழி லாளர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்ட கூலியில் இருந்து 10 சதவீத கூலி உயர்வு ஆண்டுதோறும் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த கூலி உயர்வு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வழங்கப்படும் கூலியை அடிப்படையாகக் கொண்டு முறைப்படுத்தப்படும்.

பண்டிகை விடுமுறை சம்பளமாக ஏற்கெனவே வழங்கி வரும் 220 ரூபாயில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு ரூ.20 உயர்த்தி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த கூலி உயர்வு சாயத்தொழில், பசை போடும் தொழில், பாவு ஓட்டும் தொழில், வைண்டிங் தொழில், மேஸ்திரி தொழில் ஆகியவற்றில் ஈடுபடும் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுகளை சங்கரன்கோ வில் வட்டார விசைத்தறி பேக்டரி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. 50 சதவீத கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை கேட்டு சமாதானக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சங்கரன்கோவில் நகர திருமுருகன் சிறு விசைத்தறி கூலி தொழிலாளர்கள் சங்கம் இந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டு இன்று (26-ம் தேதி) முதல் பணிக்கு செல்வதாக வாக்குறுதி அளித்து, போராட்டத்தை கைவிட்டனர்.

கூலி உயர்வு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்