நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகளை வாகனம் மூலம் நேரடியாக கொண்டு சென்று மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாமக்கல் நகராட்சியில் வாகனம் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடந்தது. எம்எல்ஏ பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வாகனம் மூலம் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்து ஆட்சியர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்டத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் 53 நடமாடும் காய்கறிக் கடைகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 40 கடை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 40 கடை, வேளாண்மைத்துறையின் சார்பில் 20 நடமாடும் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் 260 வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யப்பட உள்ளன. வாகனங்களில் காய்கறிகளின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும்.
கரோனா ஊரடங்கு நடவடிக்கைகளை கண்காணிக்க வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 36 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 500 இருந்தது. தற்போது 740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 5, 6 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு சுகாதாரப் பணியாளர் அல்லது தன்னார்வலர் மூலமாக பொதுமக்களிடம் உடல்நல பாதிப்பு குறித்து களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 4,500 வீடுகளுக்குச் சென்று களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அனைத்து வீடுகளிலும் களஆய்வு பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago