கரோனா ஊரடங்கு காலத்தில் - சமூகப் பணியில் ஈடுபடும் முன்னாள் மாணவர்கள் அமைப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை ‘என் மாணவர்கள்’ அமைப்பினர் செய்து வருகின்றனர்.

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியர் செல்லப்பாண்டியனின் ‘என் மாணவர்கள்’ அமைப்பினர்.

அதோடு, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், நிலவேம்பு குடிநீர், கிராமப்புற மாணவர்களுக்குப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்குதல், ஆன்லைனில் தனித் திறன் ஊக்குவிப்புப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் செல்லப்பாண்டியன் கூறுகையில், என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் தங்களால் இயன்ற சமூக சேவைகளை மக்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்பினர்.

எனவே, அவர்களின் கூட்டு முயற்சியால் ‘என் மாணவர்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகளை செய்து வருகிறோம். இந்த அமைப்பில் என்னிடம் படித்த மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 20 பேர் இணைந்து செயல்படுகின்றனர். கல்லூரி படிப்பு முடிந்த பின்பு சமூகப் பணியில் மீண்டும் எனது மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்