வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் - ரூ.10 கோடிக்கு காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் விற்பனை யாகியுள்ளன. ஊரடங்கை முன் னிட்டு காய்கறி விலைகள் திடீரென உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த மே 24-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது.

இதையொட்டி, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட் களை சிரமமின்றி வாங்கிச்செல்ல கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதியளித்தது.

அதன்படி, வேலூர் மாவட் டத்தில் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைத்து கடைகளும் வழக்கம் போல திறக்கப்பட்டன.

வேலூர் மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இதனால், அரசின் கரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

அதிக விலைக்கு விற்பனை

இதை பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் வழக்கத்தை காட்டிலும் 2 மடங்கு விலையை உயர்த்தி கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் வேலூர் மார்க்கெட் பகுதியில் மட்டும் ரூ.10 கோடிக்கு காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையானது‌.

இதில். காய்கறி மட்டும் ரூ‌.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென அரசு அனுமதி

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறும்போது, "திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை திடீரென கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

300 டன் காய்கறிகள் விற்பனை

வேலூர் மாநகர பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) 300 டன் காய்கறிகள் விற்பனையானது. வழக்கமான நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 500 டன் முதல் 600 டன் காய்கறிகள் விற்பனையாகும்.

நேற்று முன்தினம் வேலூருக்கு 300 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது. மொத்த வியாபாரத்தில் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், சில்லறை வியாபாரத்தில் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்