ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - நடமாடும் காய்கறி விற்பனை தொடக்கம் : விலை உயர்வை கண்காணிக்க குழு நியமனம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கியது.

தமிழகத்தில் மே 24-ம் தேதி முதல் ஒரு வாரகாலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, பெட்ரோல், குடிநீர், நாட்டு மருந்து, நேரக்கட்டுப்பாட்டுடன் உணவகம் ஆகியவை மட்டும் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் இருப்பிடத்துக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்து, நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை வாகனத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசும்போது, "வேலூர் மாவட்டத்தில் அரசு துறைகளான மகளிர் திட்டம், கூட்டுறவு துறை, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் மொத்த காய்கறி விற்பனை சங்கம், மொத்த மளிகை பொருட்கள் மற்றும் பலசரக்கு விற்பனை சங்கம், ரோட்டரி சங்கங்கள், உள்ளூர் வணிக அமைப்புகள், உள்ளூர் காய்கறி விற்பனையாளர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பிரத்யேக வாக னங்கள் மூலம் தினசரி அத்தியாவசிய காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் மளிகை பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விலை உயர்வை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில், பொது விநியோக திட்டம் துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, கற்பகம் கூட்டுறவு மார்க்கெட் கண் காணிப்பாளர் ஏழுமலை, ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத் திலும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

4 இடங்களில் அனுமதி சீட்டு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகளுக்கு சத்துவாச்சாரி பகுதி மற்றும் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம், மாநக ராட்சி 4-வது மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகளை வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகள், தங்களது வாகனங்களின் பதிவு எண், தள்ளுவண்டி என்றால் அது பற்றிய விவரம், வியாபாரிகளின் பெயர், முகவரி, ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை மண்டல அலுவலக அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், எந்த பகுதியில் வியாபாரம் செய்ய செல்கிறார்கள் என்பது குறித்த தகவல்களையும் தெரிவித்தால் இலவசமாக அனுமதி ஸ்டிக்கர் வழங்கப்படும். அந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக் கொண்டு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் வியாபாரம் செய்யலாம்.

அதேபோல, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளிலும் வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்