ஊரடங்கு தளர்வான நேற்று சேலத்தில் முக்கிய கடை வீதிகள் அனைத்திலும், மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக கரோனா பரவல் அச்சமின்றி பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், கடை வீதியில் மக்கள் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் இன்று (24-ம் தேதி) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதனை யொட்டி, அனைத்துக் கடைகளை யும் திறப்பதற்கும், போக்குவரத்து இயக்கத்துக்கும் நேற்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால், சேலம் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லாமல் இயல்பான நிலையில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. வரும் ஒருவாரம் கடைகள் ஏதும் திறக்கப்படாது என்பதால், மக்கள் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வ தில் அதிக ஆர்வம் காட்டினர்.
இதனால், சேலத்தில் மளிகைப்பொருட்கள் மொத்த வியாபாரக் கடைகள் நிறைந்த செவ்வாய் பேட்டை பால் மார்க்கெட், அம்மாப் பேட்டை சின்னக் கடை வீதி உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் வந்ததால், கடை வீதிகளின் சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல, காய்கறி களை வாங்கிச் செல்ல ஆற்றோரக் காய்கறி கடை வீதி, சூரமங்கலம் உழவர் சந்தை பகுதி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்தது.
மேலும், வழக்கமான ஞாயிற்றுக் கிழமையை விட, இறைச்சி மற்றும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து தங்களுக்கு தேவையானவைகளை வாங்கிச் சென்றனர். சேலம் மட்டுமல்லாது ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி உள்பட மாவட்டத்தின் முக்கிய இடங்கள்,கிராமங்களிலும் கடை வீதிகளில்கரோனாவுக்கு முந்தையை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. இதனிடையே, போக்குவரத்துக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந் தால், சாலை களில் ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்களில் பலர் வேகமாக பயணித்தனர்.
மேலும், கரோனா பரவல் அச்சமின்றி மக்கள் சமூக இடை வெளியை மறந்து பொருட்களை வாங்குவதில் அதிக கவனம் செலுத்தினர். இதனி டையே, மாலையில் போலீஸார் ரோந்து வந்து, கடை வீதிகளை கண் காணித்ததுடன், சில பகுதிகளில் கூட்டம் அதிகம் இருந்த கடைகளை மூடும்படி அறிவித்தபடியே சென்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசின் உத்தரவையடுத்து நேற்று காலை அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. எனினும், ஜவுளிக்கடைஉள்ளிட்டவை திறக்க காவல் துறையினர் அனுமதியளிக்க வில்லை. அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்பதால் அனைத்துக் கடை களிலும் கூட்டம் மிகுந்து காணப் பட்டது. திருச்செங்கோட்டில் காவல்துறையினர் உத்தரவையும் மீறி திறந்திருந்த ஜவுளிக்கடை உள்பட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.அதுபோல் பேருந்த போக்குவரத்து இருந்தபோதிலும் குறைந்த அளவே பயணிகள் பயணித்தனர். இரவு 9 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
ஈரோடு
ஈரோட்டில் இருந்து பொதுமக்கள் வெளியூர் செல்ல, 30 வெளிமாவட்டங்களுக்கு நேற்று முன் தினம் இரவு முதல் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஈவிஎன் சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, மளிகைக் கடைகள் நிறைந்துள்ள கொங்காலம்மன் வீதி, நேதாஜி வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள மளிகை, ஜவுளி மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் அதிக கூட்டம் இருந்தது.ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் காய்கறிகளை வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், தனிநபர் இடைவெளி கேள்விக்குறியானது. சலூன்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago