நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் - வாகனங்களில் மளிகை, காய்கறிகள் விற்பனை : வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (24-ம் தேதி) முதல் வியாபாரிகள் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மளிகை மற்றும் காய்கறி வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமாா் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தாா்.

கூட்டதில் புதிய கட்டுப் பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இவை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மளிகை, காய்கறிக் கடைகள் அனைத்தும் நாளை (24-ம் தேதி) முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுமையாக அடைக்கப்பட வேண்டும்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை விநியோகிக்க அனுமதிக்கப்படும். அவ்வாறு நேரடி விற்பனை செய்ய விருப்பம் உள்ள மளிகைக் கடை உரிமையாளா்கள் அதற்கான அனுமதி மற்றும் வாகனத்துக்கான அனுமதி அட்டையை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனையாளா்கள் முன்பதிவு பெற்ற பொருள்களை சில்லறை வணிகா்களின் இடத்துக்கே சென்று வழங்க வேண்டும். அதற்கான வாகன அனுமதி அட்டையை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நாமக்கல் நகரில் காய்கறி மொத்த விற்பனை நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும்.

காய்கறி சில்லறை விற்பனையானது இனிமேல் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்தந்தப் பகுதிகளில் நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை (24-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. கட்டுப்பாடுகளை மீறுவோா் பற்றி புகாா் தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாட்ஸ்அப் எண் வழங்கப்படும்.

மாவட்ட நிா்வாகத்தின் இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவுதலைத் தடுக்க வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், வணிகா் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காய்கறி விற்பனை தொடக்கம்

இதனிடையே, நாமக்கல் நகராட்சி மூலம் 20 வாகனங்களில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யும் பணிகளை நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் சுகவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்