ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் 400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் 400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் கடந்த 17-ம் தேதி முதல் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி போன்ற அறிகுறி இருந்தால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருகிறோம்.
வீடுகளில் தனிமைப்படுத்த முடியாத சூழ்நிலையை உள்ளவர்களுக்காக நந்தா கல்லூரியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய தனிமைபடுத்துதல் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
சிறப்பு மையத்தில் தங்கி தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரி சோதனை செய்து முடிவில் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவர். பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிந்தால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago