கரோனா தொற்றால் பாதிக்கப்படும் - ஆதரவற்ற குழந்தைகளின் சிகிச்சைக்காக படுக்கைகள் : இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரத்யேகமாக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இருவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களின் குழந்தைகளை பராமரிக்க காட்பாடியில் உள்ள ஹோப் ஹவுஸ் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 23 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகளை தங்க வைத்து பராமரிக்க முடியும்.

15 படுக்கைகள் ஒதுக்கீடு

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வேலூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரத்யேகமாக 15 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்களில் சேர்ந்துள்ளனரா? என்பதை உறுதி செய்யப்படும்.

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா குழந்தைகள் இல்லங்களில் உள்ள 120 குழந்தை களுக்கும் அங்குள்ள பணியாளர் களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளாக மாறிய குழந் தைகள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் தொலைபேசியான 0416-2222310 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்