நாமக்கல் நகராட்சியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 8 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் கூறியதாவது:
நாமக்கல் நகரில் கரோனா தொற்றால் 1800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்தல், வீடு, வீடாக கபசுரக் குடிநீர் வழங்குதல், காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரே தெருவில் 10-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டால், தகரம் கொண்டு அடைத்து, கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நகராட்சியில் உள்ள துறையூர் ரோடு முதலாவது குறுக்குத் தெரு, கணேசபுரம் புதுத்தெரு, சந்தைபேட்டைபுதூர் பெரியப்பட்டி ரோடு, பத்ரகாளியம்மன் தெரு, குழந்தான் தெரு, மாரப்பன் தெரு, சின்னமுதலைப்பட்டி, இ.பி.காலனி ஆகிய 8 தெருக்கள் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதியினை சுற்றி 3 கிலோ மீட்டர் தூர அளவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் உள்பட எவ்வித கடைகளும் செயல்படக் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தினமும் அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கு, முன்களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago