கரோனா தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகளவில் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக பிற்படுத் தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், ஆட்சியர் ப.வெங்கட பிரியா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வர்கள், கரோனா சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் இருப்பு விவரங்கள் குறித்தும், கிராமங்களில் தொற்று பரவு வதற்கான காரணங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையப் பணிகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியது: கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி, கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், மாஸ்க், ஆக்சிஜன் செறிவூட்டி உள்ளிட்ட உபகரணங்களை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மைய அலுவலர்கள் இணைந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குறைகளை உடனடி யாக தீர்க்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,84,693 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு, இதுவரை 1,77,777 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மீதியுள்ள 6,916 கார்டுகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் எஸ்.பி நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு அலுவலர் கல்யாணசுந்தரம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கோ.திருமால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago