கீழப்பாவூர் குளக்கரையில் மரங்களுக்கு தீவைப்பு : தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள பெரிய குளத்தின் மூலம் 670 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்தில் கடந்த ஆண்டு குடி மராமத்துப் பணி செய்யப்பட்டு, குளத்தின் கரை பலப்படுத்தப்பட்டது. குளத்தின் கரையில் ஆயிரக்கணக்கான பனை விதைகள் விதைப்பு செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

குளத்தின் கரையில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் இருந்தன. பல்வேறு காலங்களில் ஏற்பட்ட புயல், காற்று உள்ளிட்ட காரணங்களால் பல மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. இதற்கிடையே, மரங்களுக்கு தீ வைத்து அழிக்கும் செயலும் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, குளக்கரையில் உள்ள மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், தன்னார்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “கீழப்பாவூர் பெரிய குளத்தின் கரையில் இருந்த நிழல் தரும் பல பெரிய மரங்கள் அழிந்துவிட்டன. குளக்கரையில் மரங்கள் இருந்தால் தான் கரைகள் பலப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் நிரம்பியிருந்தபோது, கரையில் விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டது. குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்தனர்.

குளக்கரையில் இருந்த மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மரங்களுக்கு அடியில் தென்னை ஓலைகளை குவித்து வைத்து, யாருக்கும் தெரியாமல் தீ வைத்துவிடுகின்றனர். இதனால் மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிடும் சம்பவங்கள் நடக்கிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 2 பெரிய புளியமரங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளது.

குளத்தின் கரையில் 2 மரங்களுக்கு அடியில் தென்னை ஓலைகளை குவித்து வைத்து, தீ வைத்துள்ளனர். இதனால் ஒரு மரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்