திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் 50 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கோ.செல்வமூர்த்தி, சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
50 படுக்கைகள் கொண்ட இந்த மையத்தில் 2 சித்த மருத்துவர்கள், ஒரு மருந்தாளுநர், இரு செவிலியர்கள், ஒரு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒரு உதவியாளர் என மொத்தம் 7 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.
இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் படும் நோயாளிகளுக்கு முதலில் நுழைவு பெட்டகம் எனப்படும் மருந்து பெட்டகம் வழங்கப்படும். இப்பெட்டகத்தில் தாளிசாதி சூரண மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, அமுக்கரா சூரண மாத்திரை, பிரமானந்த பைரவ மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய மருந்து பொருட்கள் இருக்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்.
தேவைப்படும்போது ஆக்சிஜன் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க கரோனா நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர் வழங்கப்படும். கிராம்பு, ஓமம், மஞ்சள், மிளகு, இஞ்சி மற்றும் அதிமதுரம் உள்ளிட்ட மூலிகை பொருட்களை சேர்த்து கசாயமாக காய்ச்சி 60 மில்லி அளவை பத்து நிமிடத்திற்கு ஒருமுறை, இருதடவை அருந்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.
மேலும், மூச்சுப் பயிற்சி மற்றும் லிங்க முத்திரை, நாத சுத்தி பயிற்சி ஆகிய பயிற்சிகளை கரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் சுவாச பாதை சீராகி மூச்சு விட எளிதாக இருப்பதுடன் நுரையீரல் பலமடைந்து ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். கரோனா நோயாளிகளை 7 நாட்கள் உள்நோயாளிகளாக அனுமதித்து 6-வது நாள் கரோனா பரிசோதனை செய்யப்படும்.
7-வது நாள் வீடு திரும்பும்போது தமிழக அரசின் ஆரோக்கியம் என்ற மருந்து பெட்டகம் வழங்கப்படும். இதில் உடல் சோர்வு நீங்கி, ஆரோக்கியம் பெறும் சித்த மருந்துகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஈஸ்வரன், திருச்செங்கோடு வட்டாட்சியர் எஸ்.கண்ணன், சித்த மருத்துவ ஒருங்கிணைப்பாளர் வெங்கடபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago