திருப்பத்தூரில் வீடு, வீடாக சென்று - கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வீடு, வீடாக சென்று மாவட்ட ஆட்சியர் சிவன் அருளும், சட்டப்பேரவை உறுப் பினர் நல்லதம்பியும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க அனை வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 58 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 19 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதை அதிகரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் மாவட்டம், மடவாளம் அரசு மகளிர் பள்ளியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் மடவாளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

முகாமை தொடங்கி வைத்த பிறகு ஆட்சியர் சிவன் அருள் மற்றும் சட்டப்பேரவை உறுப் பினர் நல்லதம்பி ஆகியோர் கிராமப்பகுதியில் உள்ள வீடு, வீடாக நேரில் சென்று கரோனா பரவாமல் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடுவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை. தடுப்பூசி போடுவதால் மட்டுமே கரோனா தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். கரோனா குறித்த எந்த பயமும் மக்களுக்கு வேண்டாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, கோமேதகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்