ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த - இளைஞர்களுக்கு நூதன தண்டனை : காவல் துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஆரணியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 4 இளைஞர்களை தோப்புக் கரணம் போட செய்து காவல் துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக காலை 10 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு, இ-பதிவு இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இரு சக்கர வாகனங்களில் ஊரை சுற்றி வரும் இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆரணி நகரம் காந்தி சாலை, மார்க்கெட் பகுதி மற்றும் சத்தியமூர்த்தி சாலை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் காலை 10 மணிக்கு பிறகு இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிகளவில் பயணித்தனர். இதையறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையிலான காவல் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.

அப்போது, பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் அனைவரும் தேவையின்றி ஊர் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு இளைஞர்களையும் ‘தோப்புக் கரணம்’ போட வைத்தனர்.

மேலும், ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்ற மாட்டோம் என கூறி உறுதிமொழி ஏற்க செய்தனர். பின்னர், அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

ஆரணி பகுதியில் காவல் துறையினரின் கண்காணிப்புப் பணியில், இ-பதிவு இல்லாமல் இயக்கப்பட்ட 30 வாகனங்கள் சிக்கின. இதையடுத்து, அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

தேவை இல்லாமல் வெளியே சுற்றினால், அடுத்த கட்ட நடவடிக்கையாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஊரடங்கு காலம் முடியும் வரை திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது என காவல்துறையினர் எச்சரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்