நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ், எம்எல்ஏ பி.ராமலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று சங்கிலியை உடைப்பது மட்டுமே தொற்றை கட்டுப்படுத்தும் வழி. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளின் விவரம், ஆக்சிஜன் இருப்பு, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை விவரங்களை தொகுத்து ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் 50 ஆக்சிஜன் படுக்கையுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வீட்டில் ஒரு கரோனா நோயாளிகூட உருவாக வாய்ப்பளிக்க மாட்டேன் என ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், நகராட்சி ஆணையர் எம்.பொன்னம்பலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago