அணிமூர் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : ஆய்வுக்கு பின்னர் திருச்செங்கோடு எம்எல்ஏ உறுதி

By செய்திப்பிரிவு

அணிமூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு அடுத்த அணிமூரில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இவை அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குப்பைக் கிடங்கில் நேற்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அணிமூர் ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருச்செங்கோடு நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டு 2019-க்குள் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பையை உரமாக மாற்றி அங்கிருந்து காலி செய்திருக்க வேண்டும். ஆனால், நடைபெறவில்லை.

வரும் ஜூன் மாதத்துக்குள் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பையை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம் என தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் மீதம் உள்ள குப்பைகளை அகற்றி காலி செய்யப்படும்.இப்பிரச்சினையை தீர்க்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செங்கோடு நகராட்சி குப்பைகளை அங்கேயே பிரித்து எடுத்து இங்கே வராமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது மூன்று இடங்களில் கிடங்குகள் அமைத்தால் குப்பைகள் இங்கு கொட்டுவதை தடுக்கலாம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தினசரி காய்கறி மார்க்கெட், அத்திபாளையம் குடிநீர் நீர்தேக்கப்பகுதி ஆகிய இடங்களையும் எம்எல்ஏ ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, பொறியாளர் குணசேகரன், திருச்செங்கோடு ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜவேலு, துப்புரவு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்