பொது குடிநீர் குழாய் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில், 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் அன்றாட கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது, ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பும், வருவாயும் இன்றி வீட்டில் இருந்து வருகின்றனர்.
முகாமில், போதிய அளவில் குடிநீர் குழாய் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு வசிப்போர் ஆண்டு முழுவதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக முகாம் வாழும் இலங்கை தமிழர்கள் கூறியதாவது:
முகாமில், 250 குடியிருப்புகளில் 800-க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றோம். இங்கு, மொத்தம் 7 பொது கழிவறை மட்டுமே உள்ளன.
இதனால், இங்குள்ளவர்கள் திறந்த வெளியை தான் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். அதுபோல குறைந்த எண்ணிக்கையிலான பொதுக் குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது.
அதிலும் குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் வருவதால், பலர் குடிநீர் கிடைக்காமல் ரூ.5-க்கு விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. முகாமில் இருந்து சில கிமீ தூரத்தில் காவிரி ஆறு செல்கிறது. இருந்தபோதும், போதிய அளவில் குடிநீர் குழாய்கள் இல்லாததால் குடிநீர் பிரச்சினை ஆண்டு முழுவதும் தொடர்ந்து இருந்து வருகிறது.
தவிர பிற பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு ஒன்று மட்டும் உள்ளது. அதுவும் அவ்வப்போது பழுதாகிவிடுகிறது. அந்நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே பொது குடிநீர் குழாய், கூடுதல் கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago