விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தால் - பாவூர்சத்திரம் காய்கறிச் சந்தை இன்று திறப்பு : மொத்த கடைகள் மாலை 3 - இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

By செய்திப்பிரிவு

பாவூர்சத்திரம் காய்கறிச் சந்தையைத் திறக்கக் கோரி ஏராளமான விவசாயிகள் திரண்டு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், `இன்று முதல் இந்த சந்தை மீண்டும் செயல்படும்’ என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி சந்தையில், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

வயல்களில் அறுவடை செய்த காய்கறிகளை மாலை 3 மணிக்கு பிறகே விவசாயிகள் சந்தைக்கு கொண்டுவருவது வழக்கம். அவை ஏலம் விடப்பட்டு, நள்ளிரவு வரை வாகனங்களில் லோடு ஏற்றப்படும். இதற்கு அனுமதி அளிக்காததால் கடந்த 15-ம் தேதி முதல் பாவூர்சத்திரம் சந்தை முழுமையாக மூடப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் காய்கறிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். மேலும், கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் செல்வதும் பாதிக்கப்பட்டது.

கடந்த 5 நாட்களாக பாவூர்சத் திரம் சந்தை மூடப்பட்டதால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்த, கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பாவூர்சத்திரம் சந்தைக்கு நேற்று திரண்டு சென்றனர். மொத்த விற்பனைக் கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இன்று முதல் பாவூர்சத்திரம் சந்தை மீண்டும் செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வியாபாரிகள் மேலும் கூறும்போது, “பாவூர்சத்திரம் சந்தையில் மொத்த வியாபாரம் நடைபெறும் விதம், நேரம் குறித்தும், இந்த சந்தையால் விவசாயிகள் பயன்பெறுவது குறித்தும் அதிகாரிகளிடம் பேசினோம். இதையடுத்து, சந்தையில் உள்ள கடைகள் செயல்பட நேர கட்டுப்பாடுகள், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

அதன்பேரில், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சில்லறை விற்பனை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் சில்லறை விற்பனை கடைகள் செயல்படாது. மாலை 3 மணி முதல் மொத்த விற்பனைக் கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளனர். விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை ஏலம் விட்டு, விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளை லோடு ஏற்றி, இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கரோனா பாதுகாப்பு வழிமுறைகள், தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறிய வழிமுறைகளை கடைபிடித்து 20-ம் தேதி (இன்று) முதல் பாவூர்சத்திரம் சந்தை மீண்டும் செயல்படும். விவசாயிகள் தங்கள் காய்கறிகளை கொண்டுவந்து பயன்பெறலாம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்