திருவண்ணாமலையில் முன்களப் பணியாளர்களுக்காக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சி துறை யினர் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கரோனா தொற்றுக்கு ஆளானால் சிகிச்சை அளிக்க வசதியாக அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர் களுடன் 100 படுக்கைகளுடன் செயல்படுவதுடன் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. பிரத்யேகமாக 24 மணி நேரமும் செயல்படும் முன்களப் பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் அஜிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தி.மலை பேகோபுர தெரு, சட்ட நாயக்கன் தெரு, காஞ்சி சாலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் காய்ச்சல் மற்றும் கரோனா பரிசோதனை முகாமை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
பின்னர், சட்ட நாயக்கன் தெருவில் மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago