சுயவைத்தியம் கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று அறிகுறி களான இருமல், சளி, காய்ச்சல், உடல்சோர்வு, உடல்வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை ஏற்பட்டால் சுய வைத்தியம் மேற்கொள்ளுதல் மற்றும் மருந்தகங்களில் இருந்து நேரடியாக மருந்துகள் பெற்று உட்கொள்ளுதல் கூடாது. தொற்று அறிகுறி தோன்றிய உடனேயே காலதாமதம் செய்யாது, அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

தொற்றின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதால் உடல்நிலைக்கு எவ்வித பாதிப்புமின்றி உடனடியாக தொற்றில் இருந்து விடுபட முடியும். எனவே, பொதுமக்கள் நோய் தொற்று தோன்றிய உடனேயே சிகிச்சை பெற வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து, தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

மருத்துவர் வேண்டுகோள்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே கரோனா பரிசோதனையையும், சிகிச்சையையும் தாமாக முன்வந்து செய்யாததால் நோய் முற்றுதலும், இறப்புகளும் அதிகமாக நிகழ்கின்றன.

சிறிய அளவிலான நோய் உபாதையுடன், பிற நோய்கள் கூடுதலாக உள்ளவர்கள், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப் படுத்தும் நிலையங்களில் சேர்ந்துகொள்ள வேண்டும். இருமல் விடாமலும், சளி தொந்தரவு அதிகமாகவும், காய்ச்சல் குறையாமல் இருக்கும் நபர்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கவேண்டும். தாமதித்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோய் முற்றும் அபாயம் ஏற்படுகிறது. அப்போது, குணமாக்குவது கடினமாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்படும் வரை தாமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சர்க்கரை நோய் அளவை பரிசோதித்து அதற்கான சிகிச்சையை சரியான முறையில் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE