திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக - 350 படுக்கைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் : அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் அடுத்த ஒரு வாாரகாலத்தில் கூடுதலாக 350 படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந் திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தினந்தோறும் அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன

புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவோர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட் டுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 300 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 120 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட் டுள்ளது. கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தினந்தோறும் அனுமதிக்கப்பட்டு வருவதால் ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டன.

இதேநிலை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் தொடர்கிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை மேம்படுத்தவும், ஆக் சிஜன் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இதற்கான ஆய்வுக்கூட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரம், கூடுதலாக தேவைப்படும் வசதிகள் என்ன என்பது குறித்து அமைச்சர் ஆர்.காந்தி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 100 படுக்கைகள், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு 50 படுக்கைகள், வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கைகள் என மொத்தம் 350 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் செறியூட்டும் இயந்திரங்கள் அடுத்த ஒரு வாரக்காலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

பின்னர், மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) தேவராஜ் (ஜோலார்பேட்டை), ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன், வட்டாட்சியர்கள் அனந்தகிருஷ்ணன் (ஆம்பூர்), மோகன் (வாணியம்பாடி), சுமதி (நாட்றாம்பள்ளி) உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்