புகழூர் டிஎன்பிஎல்-லில் இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்(டிஎன்பிஎல்), ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது:
கரூர் மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. இந்நிலையில், டிஎன்பிஎல்-லில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான இயந்திரங்கள் இத்தாலியில் இருந்து வருவதற்கு தாமதமாகும் என்பதால், இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூன் 2-வது வாரமாகிவிடும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், தற்போது சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அங்கேயே 500 படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளிக்கப் படுகிறது. அந்த முறையைப் பின்பற்றி, டிஎன்பிஎல்-லிலும் ஒரு வாரத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து, இங்குள்ள சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நாளை(இன்று) தொடங்குகின்றன.
மேலும், கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மே 25 முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குகிறது. தொடர்ந்து, அடுத்தடுத்து 7 மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். மின் நுகர்வோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக் கக்கூடாது என கடந்த 10-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார்.
தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை பார்வையிட்ட பிறகு அவர் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், அவை 370 ஆக உயர்த்தப்படுகின்றன. இங்கு செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில், ரூ.21.80 லட்சத்தில் 30 கான்சென்ட்ரேட்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்ட மாக 20 கான்சென்ட்ரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக கூட்டத்தில், டிஎன் பிஎல் செயல் இயக்குநர் எஸ்.பி.ஆர்.கிருஷ்ணன், எம்எல்ஏக்கள் குளித்தலை இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி மற்றும் சேலம் இரும்பாலையில் ஆக்சி ஜன் உற்பத்தி இயந்திரம் அமைத்த தொழில்நுட்ப அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago