திருவண்ணாமலை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் குவிந்து வருவதால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குக்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதாக கூறிக்கொண்டு, கடை வீதிகளில் மக்கள் குவிந்தனர்.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை உள்ள சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது. ஒரே பகுதியில் காய்கறி அங்காடி, மளிகை கடைகள் இருப்பதால் மக்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால், காய்கறி அங்காடியை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல், சேத்துப்பட்டில் உள்ள நான்கு திசை சாலையிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர். மேலும், திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி, வேட்டவலம், போளூர், கீழ்பென்னாத்தூர் போன்ற பகுதிகளிலும் பொது மக்கள் அதிகளவில் கூடினர்.
இது குறித்து சுகாதாரத் துறை யினர் கூறும்போது, “அத்தியா வசிய பொருட்களை வாங்கு கிறோம் என கூறிக் கொண்டு மக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று பரவல் அதிகரிக்கும். கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. வணிகர்களும் தங்களது வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இந்நிலை தினசரி தொடர்ந்தால், கரோனா தொற்று பரவலை தடுக்க முடியாது.பொது மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago