புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை கிராமத்தில் வசிக்கும் ராமர் மனைவி சீத்தாலட்சுமி என்பவர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். விழுப்புரத்தில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க வந்த விவசாயியை ஏமாற்றி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கைது செய்தனர்.
கைதான சீத்தாலட்சுமி உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், மேலூர், திலகர்திடல், திருபரங்குன்றம், ஆலங்குடி, இளையங்குடி, ஒறையூர் மற்றும் காரியப்பட்டி போன்ற இடங்களில் பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை , ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்தமுருகன் மகன் அன்பரசன் (எ) அன்பு(32) என்பவரை அவலூர்பேட்டை போலீஸார் மதுவிலக்கு குற்ற வழக்கில் கைது செய்தனர். செஞ்சி அருகே போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் கோவிந்தசாமி (38) என்பவரை நல்லாண்பிள்ளைப்பெற்றாள் போலீஸார் மதுவிலக்கு குற்ற வழக்கில் கைது செய்தனர். இதில், சீத்தாலட்சுமி வேலூர் மகளிர் சிறையில் உள்ளார். மற்ற 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு விழுப்புரம் எஸ்.பி ராதாகிருஷ்ணன் ஆட்சியர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவுகளை சிறைகளில் இருக்கும் 3 பேரிடமும் சிறை ஊழியர்கள் மூலம் போலீஸார் நேற்று வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 16 பேர் குண்டர் சட்டத்திலும், 8 பேர் மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு இதுவரை 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago