கர்ப்பிணி பெண்களுக்காக அரியப்பபுரத்தில் - இன்று முதல் சிறப்பு கரோனா சிகிச்சை மையம் :

தென்காசி மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் கரோனாவால் அதிக கவனம் செலுத்த வேண்டிய கர்ப்பிணி பெண்கள் உடல் நிலை குறித்த ஆய்வு தொடர்பாக வட்டார மருத்துவ அலுலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக ஆட்சியர் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையின் தற்போதைய சூழ்நிலையில், நடப்பு மாதத்தில் பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணி பெண்கள் உடல்நிலை, வாராந்திர பரிசோதனை முடிவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் கரோனா தொற்று ஏற்படும்போது எங்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கரோனா சிகிச்சை மையமாக சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாவது சிறப்பு கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு திங்கள்கிழமை (இன்று) முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யோகானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE