வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்களுக்கு போடுவதற்காக 4,500 டோஸ் கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதல் தவணை செலுத்தியவர்களுக்கு 2-வது தவணையும், முதல் தவணை போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி பற்றாக்குறையால் முதல் தவணையாக கோவாக்கின் போட்டவர்கள் 2-ம் தவணை போட முடியாமல் தவித்தனர். அதேநேரத்தில் கோவிஷீல்டு போட்டவர்களுக்கு போதுமான அளவுக்கு இருப்பு இருந்ததால் அவர்களுக்கு தொடர்ந்து 2-வது தவணை போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 2,500 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளும், 2,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வேலூர் மாவட்டத்துக்கு வந்தடைந்தன. இதன் மூலம் கோவாக்சின் 2-வது தவணை போட உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் கோவிஷீல்டு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்பதிவு செய்துள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago