நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தை ஆக்சிஜன் வசதி யுடன் கூடிய கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணியை மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மருத்துவ மனைகள் மட்டுமின்றி தனியார் பள்ளி, கல்லூரி உள்ளிட்டவையும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தை கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடை பெற்று வருகிறது.
இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் விளக்கிக் கூறினார்.
மேலும், ஓரிரு தினங்களில் சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் உறுதியளித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம், வட்டாட்சியர் தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago