சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் - கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அரிசி ரேஷன் கார்டுதாரர் களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி 1,591 ரேஷன் கடைகளில் நேற்று தொடங்கப் பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 10,12,249 அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.202.44 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி, முகக் கவம் அணிந்து, ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தினமும் 200 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிவாரணத் தொகை வழங்கப்படும்.

சேலம் கன்னங்குறிச்சி ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ராமன் தலைமை வகித்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கினார். நிகழ்ச்சியில், சேலம் எம்பி பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல்லில் ரூ.105.05 கோடி

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள என்சிஎம்எஸ் ரேஷன் கடையில் கரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ராமலிங்கம் பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 292 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 920 ரேஷன் கடைகள் மூலம் ரூ.105.05 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப் படுகிறது என்றும், உதவித் தொகை பெறுவதில் குறைபாடுகள் இருந்தால் 04286-281116 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் ஆட்சியர் கூறினார்.

ஈரோட்டில் அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நடந்த விழாவில், கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப் பட்ட பகுதியில் இருக்கும்மக்களுக்கு தனிமை காலம் முடிந்தவுடன் அவர்கள் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடை களில் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்