ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையை அதிகரித் ததால் நகரங்களின் சாலைகள் வெறிச்சோடின.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதில், புதிய கட்டுப் பாடுகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க வேண்டும். மற்ற கடைகள் அனைத்தும் மூட வேண்டும். ஏடிஎம், பெட்ரோல் பங்க், சித்தா மற்றும் அலோபதி மருந்தகங்கள் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நேற்று முதல் செயல்பட அனுமதி யில்லை. வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ்க்கு பதிலாக இ-பதிவு நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி என்ற நிலை மாற்றப்பட்டு நேற்று முதல் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவை களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதிய ஊரடங்கு அறிவிப்பால் நேற்று காலை 10 மணிக்குப் பிறகு காவல் துறையினர் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவசியம் இல்லாமல் வாகனங்களில் சென்றவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பியதுடன் தொடர்ந்து வந்தால் வாகனம் பறிமுதல் செய் யப்படும் என எச்சரித்தனர்.
அதேபோல், காலை 10 மணிக்குப் பிறகு இயக்கப்பட்ட ஆட்டோக்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர். காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்திய காவல் துறையினர் பயணிகள் யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் நேராக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் காலை 10 மணிக்குப் பிறகு அதிகப்படியான வாகனத் தணிக் கையில் ஈடுபட்டதால் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கிருபானந்த வாரியார் சாலையில் யாரும் செல்லாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தகரங் களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். அதேபோல், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களிலும் தடுப்பு களை வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் வாரச்சந்தை, வண்டிமேடு, ராணிப்பேட்டை பஜார், காந்தி சாலை மற்றும் ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரில் காலை 10 மணிக்குப் பிறகு காவல் துறையினர் வாகனத் தணிக்கையை அதிகரித்த பிறகே நிலை கட்டுக்குள் வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago