தமிழகத்தில் நைட்ரஜன் உற்பத்தி செய்யும் இடங்களிலும் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை யில் உள்ள சித்தா பிரிவு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மூலிகை பயிர் தோட்டம், உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்டவற்றை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆலங்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு, 50 படுக்கைகளுடன் கரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஓரிரு தினங்களில் கூடுதலாக நியமிக்கப்படுவர் என்றார்.
பின்னர், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சிறைத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது:
தமிழகத்தில் நைட்ரஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகத்தில் தேவையான அளவைவிட கூடுதலாக ஆக்சிஜன் கையிருப்பில் இருக்கும் என்றார்.
ஆய்வின்போது, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, எம்எல்ஏகள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago