நண்பகல் 12 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் அபராதம், சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி ஆணையர்களிடம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசியதாவது:
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாகராட்சி அலுவலகப் பணியாளர்கள் 3 குழுக்களாக பிரித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மளிகைக் கடைகள், தேநீர் கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படலாம். நண்பகல் 12 மணிக்கு மேல் கடைகள் செயல்பட்டால் அபராதம் விதித்தல், சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சிப் பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை வளாகங்கள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களில் தினசரி 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும், தனிமைப்படுத்தப்பட்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு வைட்டமின் சி, ஜிங் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் போன்றவை தொடர்ந்து வழங்க வேண்டும்.
ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.
அவ்வாறு வெளியே வரும் போது முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்கள் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். சேலம் மண்டல நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் ந.கமலாநாதன், நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago