விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நிவாரண டோக்கன்களை திமுகவினர் பொதுமக்களுக்கு வழங்கி தங்களை முன்னிலை படுத்துவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 87 ஆயிரத்து 850 பேர் பயனடைய உள்ளனர். இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை ரேஷன் கடை விற்பனையாளர்கள் நாளைக்குள் முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட டோக்கன்களை திமுகவினர் மொத்தமாக பெற்று அவர்களே மக்களிடம் வழங்கி வருகின்றனர். அதை படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் மட்டும் ரேஷன் கடை விற்பனையாளர்களை தங்களுடன் அழைத்து செல்கிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், " மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகள் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவினர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக நிர்வாகிகள் தாங்கள் மக்கள் பணியாற்றுவதாக காட்டிக்கொள்ள இப்படி செய்கிறார்கள். திமுகவினர் இப்படி தங்களை முன்னிலை படுத்த இதனை கையில் எடுத்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago