திருவண்ணாமலையில் கரோனா ஊரடங்கு எதிரொலியாக சர்க்கஸ் காட்சிகள் முடங்கிப் போனதால், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரம் காந்தி நகரில் தனியார் சர்க்கஸ் நடைபெற்று வந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 வாரமாக, சர்க்கஸ் காட்சிகள் நடைபெறவில்லை. இதனால், சர்க்கஸ் காட்சியில் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தும் தொழி லாளர்கள் மற்றும் விலங்குகள் உணவு இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தன்னார்வலர்கள், அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும், அவர்களது பசியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, “எங்களது சர்க்கஸ் நிறுவனத்தில் வட கிழக்கு மாநில மான அசாம், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறோம். கரோனா காரணமாக கடந்த ஓராண்டாக வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். சர்க்கஸ் தொழிலை தவிர, பிற தொழில் தெரியாததால், குடும்பத்துடன் உணவுக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாகசங்கள் மூலம் மக்களை மகிழ்வித்த எங்களது குடும்பங்கள், கண்களில் நீர் துளிகளுடன் வாழ்ந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணா மலையில் கடந்த மாதம் தொடங்கிய சர்க்கஸ் காட்சிகள் விரைவாக முடிவுக்கு வந்துவிட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 வாரங்களாக சர்க்கஸ் காட்சிகள் நடைபெறவில்லை. கூடாரங்களில் முடங்கி கிடக்கிறோம். உணவு இல்லாமல் தவித்த எங்களுக்கு, திருவண்ணாமலையை சேர்ந்த நல்ல உள்ளங்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். அவர் களுக்கு நன்றி. இதன்மூலம் ஒரு வேளை பசியாறி வருகிறோம். இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை.
எங்களை போல், எங்களுடன் இருக்கும் ஒட்டகம், நாய், குதிரை போன்ற விலங்குகளும் பசியுடன் உள்ளது. அவற்றுக்கும் எங்களால் முடிந்த வரை உணவு கொடுக்கிறோம்.
சர்க்கஸ் தொழி லாளர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும். எங்களது குடும்பங்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உதவித் தொகையை வழங்கிட வேண்டும். மேலும், நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago